அபானம் எனும் ஒரு வாயு இடுப்பின் கீழ்ப் பகுதியில் தங்கி,
சிறுநீர்ப்பை, இடுப்பின் பின்பக்கம், ஆண் அல்லது பெண் குறி, விதைகள், தொடை
இடுக்குகள், தொடைகள் இவற்றில் உலவுகின்றது. மலம், சிறுநீர், விந்து,
மாதவிடாய், கரு இவை உடலில் உறைதல், இவற்றை வெளிப்படுத்துதல் போன்ற
செயல்களைச் செய்கிறது.
தரையில் அதிக நேரம் கூன் போட்டு அமர்ந்து கொண்டு கறிகாய் நறுக்குவது,
எழுதுவது, கைகளைத் தரையில் ஊன்றி எழாமல் அப்படியே தரையிலிருந்து எழுந்து
கொள்ளுதல், குளிர்ச்சியான தரையில் கீழ் இடுப்புப் பகுதி படும்படி
படுத்துறங்குதல்,உணவில் அதிகமான காரம், கசப்பு, துவர்ப்புச் சுவை
சேர்த்துக் கொள்ளுதல், இடுப்பை வளைத்துத் தண்ணீர்க் குடத்தைத் தூக்குதல்
போன்ற சில காரணங்களால், இந்த அபான வாயுவானது சீற்றங்கொண்டு இடுப்பின்
கீழ்ப் பகுதியில் அமைந்துள்ள தண்டுவட நரம்புகள் பாதிப்படையும் வகையில்
செயல்பட்டுவிட்டால், இடுப்பின் கீழுள்ள நரம்புகளைச் சுண்டி இழுக்கச்
செய்யும்.
இரவில் ஓய்வெடுத்து உறங்கும் வேளையில், இந்த வாயுவின் சீற்றம்
நரம்புகளைத் தாக்கும்போது, வலி உயிர் போகும். கால் விரல்களைத் தன்னிச்சையாக
சுருண்டுவிடச் செய்யும் அளவுக்கு இந்த வாயுவானது, அபார சக்தியைக் கொண்டதாக
இருக்கிறது.