தி.மு.க. வரலாறு
தென்னக மக்களின் அடிமைத்தனத்தை அகற்றி சமுதாயம், பொருளாதாரம், அரசியல்
துறைகளில் அவர்கள் அதிக இடம் பெறவும், அரசு பதவிகளிலும் இயக்கங்களிலும்
பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை எதிர்க்கவும், சர்.பி. தியாகராயர், டாக்டர்.
நடேசன், டாக்டர் டி.எம். நாயர் ஆகியோர் 1916-இல் தொடங்கிய தென் இந்திய நல
உரிமைச்சங்கம், திராவிட இயக்கத்தின் கருவாகும். இச்சங்கம் `ஜஸ்டிஸ் (நீதி)’
என்ற ஆங்கில பத்திரிக்கை நடத்தியதால், நீதிக்கட்சி (Justice Party) என
அழைக்கப்பட்டது. பிராமணர் அல்லாதாரின்சமூக, பொருளாதார, அரசியல் நலன்களைப்
பாதுகாப்பதே நீதிக்கட்சியின் நோக்கம்.
காங்கிரஸ் கட்சியில் பிராமணர்களின் ஆதிக்கத்திலும் அவர்களின் தீவிர
இந்து சனாதன கோட்பாடுகளிலும் வெறுப்புற்ற தந்தை பெரியார் என பின்னாளில்
போற்றப்பட்ட ஈ.வெ.இராமசாமி அவர்கள் 1925-இல் காங்கிரசை விட்டு வெளியேறி
சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார். இவ்வியக்கம் 1941-இல் திராவிடர் கழகம்
என்ற விடுதலை இயக்கமாக மாற்றப்பட்டது. அறிஞர் அண்ணா போன்ற முன்னணி
தலைவர்கள் இயக்கத்தின் குறிக் கோள்களை, கொள்கைகளை அழகு தமிழில் நாடெங்கும்
பரப்பினர். தந்தைபெரியாருக்கும் அறிஞர் அண்ணா மற்றும் முன்னணி
தலைவர்களுக்குமிடையே சில கருத்து மாறுபாடுகள் ஏற்பட்டதால், அவர்கள்
திராவிடர் கழகத்திலிருந்து விலகி 1949 செப்டம்பர் 17-இல் திராவிட
முன்னேற்றக்கழகத்தை தொடங்கினர். அறிஞர் அண்ணா, அதன் பொதுச் செயலாளராக
தேர்ந்தெடுக்கப்பட்டார். அறிஞர் அண்ணாவின் இலட்சியத்தையும், அவர் ஏற்றிய
கொள்கை தீபத்தையும் தொடர்ந்து காத்து வரும் டாக்டர் கலைஞர் எனபோற்றப்படும்
டாக்டர் மு.கருணாநிதி அவர்கள் கொள்கை பரப்புக்குழுவின் உறுப்பினராக
நியமிக்கப்பட்டார்.
அறிஞர் அண்ணாவின் `திராவிடநாடு’, டாக்டர் கலைஞரின் `முரசொலி’ ஆகிய
ஏடுகள் மக்களிடையிலும், கட்சி தொண்டர்களிடையிலும் புதிய
விழிப்புணர்ச்சியையும், எழுச்சியையும் ஏற்படுத்தி தி.மு.கழகத்தின் வாளாக
கேடயமாக வலம் வந்தன. கழக இலட்சியங்களை நியாயமான, சட்டத்திற்குட்பட்ட
முறையில் அடைய, போராட வேண்டும் என்ற நோக்கத்துடன், அறிஞர் அண்ணா அவர்கள்
தனது தம்பியரை ‘‘கடமை, கண்ணியம், கட்டுப்பாடு” என்ற தாரகமந்திரம் மூலம்
கட்டுக்கோப்பான வழியில் நடத்திச்சென்றார். 1957 பொது தேர்தலில் தி.மு.க. 15
சட்டமன்ற இடங்களிலும், 2 பாராளுமன்ற இடங்களிலும் வெற்றிப் பெற்றது. அசைக்க
முடியாது என ஆணவமுரசம் கொட்டிய காங்கிரஸ் கோட்டையில் கீறல்கள் உருவாயின.
தி.மு.க தொடங்கப்பட்டு பதினெட்டே ஆண்டுகளுக்குள் தமிழ்நாட்டில் அரசமைத்தது
தி.மு.க.
அறிஞர் அண்ணாவின் மறைவுக்கு பிறகு, டாக்டர் கலைஞர் அவர்களைத்
தலைவராகவும் பேராசிரியர் க.அன்பழகன் பொதுச்செயலாளராகவும் திரு. ஆற்காடு
வீராசாமி பொருளாளராகவும் கொண்ட மாபெரும் இயக்கமான தி.மு.க.விற்கு 65
இலட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும்
60,000 கிளைக்கழகங்கள் உள்ளன. தற்போது தி.மு.க-வின் பொருளாளராக விளங்கும்
மு.க.ஸ்டாலின் அவர்களை, டாக்டர் கலைஞர் கருணாநிதி, தன்னுடைய அரசியல்
வாரிசாக அறிவித்துள்ளார். உட்கட்சி தேர்தல்களை காலந்தவறாது ஜனநாய கவழியில்
நடத்தும் ஒரே இயக்கம் தி.மு.க. ஆகும்.
சமூக சீர்திருத்தமும், தேசிய ஒருமைப்பாடும்
கைத்தறி நெசவுத் தொழிலை ஊக்குவிக்கவும், அத்தொழிலாளர்களின் துயர்
துடைக்கவும் கழகத்தினர் அனைவரும் கைத்தறி ஆடையே அணிய முடிவு
எடுக்கப்பட்டது. தஞ்சையில் 1954-இல் ஏற்பட்ட புயல் வெள்ளத்தால்
பாதிக்கப்பட்டோர் கண்ணீர் துடைக்க கழகம் நிதியும், உடையும் வழங்கியது.
1962-இல் சீனா ஆக்கிரமிப்பின்போது காங்கிரஸ் அரசுக்கு தி.மு.க. முழு ஆதரவு
அளித்தது. மாநாடுகள் நடத்தி தேசிய பாதுகாப்பிற்கு பெரும் நிதி திரட்டி
அளித்த பெருமை தி.மு.க.விற்கு மட்டுமே கிடைத்தது. இத்தனைக்கும் மேலாக
கட்சியின் நலனை விட நாட்டு நலனை முன்நிறுத்தி, அறிஞர் அண்ணா திராவிட நாடு
பிரிவினைக் கோரிக்கையை கைவிட்டார். தி.மு.க.வின் தேசியப் பார்வையில் இது
ஒரு திருப்புமுனையாகும்.
1971-இல் இந்திய – பாகிஸ்தான் போரில், அப்போதைய தமிழக முதல்வர் டாக்டர்
கலைஞர் தேசிய பாதுகாப்பு நிதிக்கு ரூ.6 கோடி அளித்தார். இந்தியாவிலேயே இந்த
அளவு நிதிஅளித்த ஒரே மாநிலம் தமிழகமாகும்.
இந்திய பாதுகாப்பில் மற்ற அனைத்திந்திய கட்சிகளை விட தி.மு.க.வுக்கு
அதிக ஆர்வமும், அக்கறையும் உள்ள தென்பதை நிரூபிக்கும் வகையில் 1999 இந்திய –
பாகிஸ்தான் எல்லை, கார்கில் போருக்கு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர்
அவர்கள் ரூ.50.43 கோடி நிதி திரட்டி தமிழகத்தின் தனிப்பெருமையை மீண்டும்
நிலைநாட்டியுள்ளார். இத்துடன்,போரில் வீரமரணம் அடைந்த புதிய புறநானூற்று
தமிழ் மறவர் குடும்பத்திற்கு தலா ரூ.5 இலட்சம் நிதியும், வீடும்,
வேலைவாய்ப்பும், கல்வி வசதியும் அளித்துள்ளார்.
1972-இல் டாக்டர் கலைஞரால் உருவாக்கப்பட்ட தி.மு.க. அறக்கட்டளை பல
நற்பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஆராய்ச்சி நூலகம், இலவச கண் சிகிச்சை
மருத்துவமனை ஆகியவை அறிவாலய வளாகத்தில் செயல்படுகின்றன. ஆண்டுதோறும் ரூ. 15
இலட்சத்திற்கு ஏழை மாணவர்கள் கல்விக்காகவும், வெள்ளம், தீ, விபத்து, பூமி
அதிர்ச்சி போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படுவோருக்கு நிதி உதவியும்
அளிக்கின்றது.
அறப்போராட்டங்கள்
மக்களின் நலனை பேணும் பாதுகாவலனாக, அவர் இடர்துடைக்க அறவழியில் போராட
தி.மு.க. என்றுமே தயங்கியதில்லை. இராஜாஜியின் குலக்கல்வித்திட்டத்தை
எதிர்த்து ஒருமுனையிலும், தமிழர்களை `முட்டாள்கள்’ என்று அவதூறு செய்த
பிரதமர் பண்டித நேரு அவர்களைக் கண்டித்து இரண்டாவது முனையிலும்,
டால்மியாபுரம் புகைவண்டி நிலையத்தின் பெயரைமாற்றிக் கல்லக்குடி எனத்தமிழ்ப்
பெயரிட வேண்டும் என்று மூன்றாவது முனையிலும் தி.மு.க. போர்க்களங்களை
அமைத்தது. அந்த அறப்போரில், கல்லக்குடி களத்திற்கு, கலைஞர் படைத்தலைவர்.
ஜூலை 15 ஒரேநாள் போரில், ஆறு உயிர்களப்பலி, அநேகர் சித்திரவதை, 5000 பேர்
சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்தி எதிர்ப்பு
1938-இல் சென்னை இராஜதானி என அன்று அழைக்கப்பட்ட தமிழகத்திலுள்ள
பள்ளிகளில் இந்தி கட்டாய பாடமாக புகுத்தப்பட்டது. இதனை எதிர்த்து தந்தை
பெரியார் தலைமையில் தமிழறிஞர்களும், மதத்தலைவர்களும் கட்சி வேறுபாடின்றி
அணிவகுத்து நின்றனர். தமிழன் தொடுத்த இப்போரில் தாளமுத்து, நடராசன் என்ற
இரு இளைஞர்கள் இந்தியை எதிர்த்து சிறைபுகுந்து சிறைக்கோட்டத்தில் வீர மரணம்
அடைந்தனர். இந்திய சுதந்திற்குப் பின்னர் காங்கிரஸ் கட்சி தேசியமொழி,
பொதுமொழி, இணைப்புமொழி, நிர்வாகமொழி, ஆட்சிமொழி என்ற பல்வேறு பெயர்களில்
இந்தியை திணிக்க முனைந்தது. ஆனால் அறிஞர் அண்ணாவின் தலைமையில் தி.மு.கழகம்
பலபோராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி இந்தியை எதிர்த்து, தமிழைக்காத்தது.
இந்தி எதிர்ப்பு வரலாறு, 1964-க்குப்பின் 1984-இல் மீண்டும் திரும்பியது.
புதிய கல்விக் கொள்கைஎன்ற போர்வையில் இராஜீவ் காந்தி அரசு ``நவோதயா’’
பள்ளிகள் திறக்கவும் அங்கு இந்தி மட்டுமே போதனை மொழியாக அமையவும் திட்டம்
வகுத்து, இந்தியை நாடெங்கும்பரப்ப முனைந்தது. அப்போதும் அந்த மறைமுக ஹிந்தி
திணிப்பை முளையிலேயே கிள்ளி எறிந்த தி.மு.க, இன்றும் தொடர்ந்து தமிழ்
மொழியையும், கலாச்சாரத்தையும் தன் உயிரென எண்ணி காத்து வருகிறது.
அண்ணாவின் ஆட்சி
அறிஞர் அண்ணா அவர்கள் குறுகிய காலமே ஆட்சியில் இருந்தபோதும் கழகத்தின்
நீண்டநாள் இலட்சியங்களை நிறைவேற்றும் வகையில், சட்டதிட்டங்களை வகுத்தார்.
அவரது சாதனைகளில் சரித்திரம் படைத்தவை:
- சென்னை மாநிலம் என அழைக்கப்பட்ட தமிழகத்தின் பெயரை தமிழ்நாடு என மாற்றி தமிழர்களின் தன்மானத்தை உயர்த்தினார்.
- அவர் இதயத்தில் கொண்ட பகுத்தறிவுக் கொள்கைகளுக்கு ஏற்ப சீர்திருத்த திருமணங்களுக்கு சட்டப்பாதுகாப்பு அளித்தார்.
- மும்மொழித்திட்டத்தை அகற்றி, தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளுக்கு இடமளித்து, தமிழகப் பள்ளிகளிலிருந்து இந்திமொழியை அறவே நீக்கினார்.
- சென்னை, கோவை ஆகிய பெருநகரங்களில் ரூபாய்க்கு ஒரு படி அரிசி எனும் திட்டம் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டது. ஏழைகளுக்கு எரியாத வீடுகள் (கல்நார் கூரையுடன்) அளிக்கப்பட்டன. பேருந்துகள் நாட்டுடமை ஆகிய திட்டங்கள் தொடங்கப்பெற்றது.
- 1968 ஜனவரி முதல் வாரத்தில் இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டை சங்ககாலம் மீண்டும் வந்ததோ! என அனைவரும் பூரித்திடும் வகையில் எழில் குலுங்கிட, தமிழன்னையின் இதயம் குளிர்ந்திட, இனிது நடத்தினார்.
ஆனால் காலதேவன் கொடுமையால் அண்ணாவின் தலைமை அதிக நாள் நீடிக்கவில்லை.
1969 பிப்ரவரி 3-இல் அறிஞர் அண்ணா மறைந்தார். தமிழகமே இருளில் மூழ்கியது.
தி.மு.க-வின் புதிய சகாப்தம்
அறிஞர் அண்ணாவின் இலட்சியங்களைத் தொடர்ந்து நிறைவேற்றவும்,
தி.மு.கழகத்தைக் கட்டிகாத்திடவும், தமிழகத்தின் நலனைப் பாதுகாக்கவும்,
கழகத்தின் தலைமைப்பொறுப்பு டாக்டர் கலைஞரின் தோளில் சுமத்தப்பட்டது.
``டாக்டர் கலைஞர் தமிழக முதல்வராக’’ 1969-இல் பிப்ரவரி 10-இல் பதவி
ஏற்றார். தமிழக வரலாற்றில் ஒரு புதியசகாப்தம் தொடங்கியது. அறிஞர்
அண்ணாவிற்கும், டாக்டர் கலைஞருக்கும் உள்ள உறவு; சமுதாய சிந்தனையில்
சாக்ரடீஸ் - பிளேட்டோ, கழகத்தைக் கட்டிக்காப்பதில் லெனின்– ஸ்டாலின் ஜனநாயக
நெறிகளில் காந்தியடிகள் – நேரு போன்றது. 1960-இல் டாக்டர் கலைஞர்
தி.மு.கழகத்தின் பொருளாளர் ஆனார். 1967 பொதுத்தேர்தலுக்கு 10 இலட்சம்
ரூபாய் நிதி திரட்டும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. கலைஞர் கண்
துஞ்சாது, பசிநோக்காது பம்பரம் போல் சுழன்று, பட்டிதொட்டி எல்லாம் சென்று,
11 இலட்சம் ரூபாய் நிதி திரட்டினார். அகமகிழ்ந்த அண்ணா தி.மு.கழக வேட்பாளர்
பட்டியலை விருகம்பாக்கம் கழக மாநாட்டில் அறிவித்தபோது கூடி இருந்தோர்
அனைவரும் மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்கும் வகையில் சைதாப்பேட்டைக்கு பதினோரு
இலட்சம் என்றார். கலைஞரின் முப்பது ஆண்டு தலைமையில் தி.மு.கழகம்,
கட்டுக்கோப்பாக சுயநலமிகளின் சூழ்ச்சிக்கு இறையாகாமல், எண்ணற்ற
நலத்திட்டங்களை அறிவித்து மக்கள் போற்றும் கட்சியாக இயங்கி வருகிறது.
தி.மு.கழக ஆட்சியின் சாதனைகள்
கலைஞரின் தலைமையில், தமிழ்நாடு பலதுறைகளில் புதிய சாதனைகள்
படைத்துள்ளது. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணும் தி.மு.கழக ஆட்சியில்,
அவர் தலைமையில் நலிவுற்ற, பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக
பலதிட்டங்கள் இந்தியாவிலேயே முதன்முதலாக நிறைவேற்றப்பட்டன. அவைகளுள்சில :
- குடிசை மாற்று வாரியம்.
- பிச்சைக்காரர், தொழு நோயாளர் மறுவாழ்வு இல்லங்கள்.
- கோவில்களின் ஆதரவில் ஆதரவற்றோருக்கு பாதுகாப்பு தரும் கருணை இல்லங்கள்.
- கண்ணொளி திட்டத்தின் கீழ் இலவச கண் சிகிச்சை முகாம்கள் – அவர்களுக்கு இலவச கண்ணாடிகள்.
- பண்டிகை நாட்களில் ஏழைகளுக்கு இலவச அரிசி - ஆடைகள்.
- விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்.
- ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோருக்கு தனித்தனி துறைகள்.
- போலீசார் தேவைகள் உணர இந்தியாவிலேயே முதன்முதலாக போலீஸ்கமிஷன் அமைக்கப்பட்டது.
- தமிழகத்திலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் மின்விளக்குவசதி.
- விவசாயத் தொழிலாளர்களுக்கு குடியிருப்பு மனை அனுபோகதாரர்கள் சட்டம்.
- பேருந்துகள் நாட்டுடமை தமிழகத்தில் முழுமைப்பெற்றது.
- அரசுஊழியர் குடும்பப் பாதுகாப்பு திட்டம்.
- சிகப்பு நாடா முறை இரகசியக் குறிப்பு முறை ஒழிப்பு.
- கைரிக்ஷாக்களை ஒழித்து இலவச சைக்கிள் ரிக்ஷாக்கள் வழங்கியது.
- ஊனமுற்றோர் மறுவாழ்வுத் திட்டம்.
- பெண்களுக்கு சொத்துரிமை.
- மகளிர் இலவச பட்டப்படிப்பு திட்டம்.
- ஏழைப்பெண்கள் திருமண உதவித்திட்டம்.
- அரசுப்பணியில் பெண்களுக்கு 30 விழுக்காடு ஒதுக்கீடு.
- கலப்பு குடும்பத்து பெண்களுக்கு பேறுகால நிதியுதவி.
- சுதந்திர போராட்ட வீரர்களுக்கு ஓய்வூதிய உயர்வு.
- புதிய பல்கலைக்கழகங்கள்
- மொழிப்போர்த் தியாகிகளுக்கு ஓய்வூதியம்.
- மாணவர்களுக்கு இலவச பேருந்து பயணச்சலுகை.
- ஆதிதிராவிடர்களுக்கு இலவச வீடுகள்.
- மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு.
- மாநில திட்டக்குழு அமைத்தல்.
கலைஞரின் முற்போக்குத் திட்டங்களைப் பாராட்டி, குடியரசுத் தலைவர் வி.வி.
கிரி அவர்கள் தமிழ்நாடு, இந்தியாவிற்கு வழிகாட்டுகிறது எனப் புகழாரம்
சூட்டினார். தமிழ்மக்களின் பொருளாதார வளர்ச்சி மட்டுமின்றி தமிழ் இனத்தின்
பழைய சிறப்பை அவர்கள் நினைவுகூறும் வகையிலும், தமிழ் மொழிக்காக பாடுபட்ட
பெரியோர்களின் சேவைகள் தமிழர் மனதில் என்றும் நிலைநிறுத்தும் வகையில்,
டாக்டர் கலைஞர் அவர்கள் பூம்புகார் கலைக்கூடம், வள்ளுவர் கோட்டம்,
கட்டபொம்மன் கோட்டை,திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை தி.மு.க ஆட்சியில்
உருவாக்கினார்.
அறிஞர் அண்ணாவின் தலைமையில் தி.மு.கழகம் தமிழ்நாடு அளவில் மாபெரும்
சக்தியாக உருவானது. கலைஞர் அவர்கள் அதனை அகில இந்திய நிலைக்கு உயர்த்தி
இந்தியாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சக்தியாக வளர்த்துள்ளார்.
Source:http://dmk.in/tamil/about-party